மண்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்

தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அந்த அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மறைந்த நெல்சன் மண்டேலா உலகளவில் அழிக்கமுடியாத புகழ்வாய்ந்த புனிதராவார்.

1994 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்கா,  பொதுநலவாயத்தில் மீண்டும் இணைந்ததனால் பொதுநலவாயம் மேலும் வளப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த தலைவர் விட்டுச்சென்ற முதுசம் விஞ்சமுடியாததென என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மறைந்த மண்டேலா, நிகழ்கால வரலாற்றில் மனித கௌரவம் மற்றும் உன்னத தலைமைத்துவ பண்பு ஆகியவற்றின் உருவகமாக திகழ்ந்தார்.

இவர் வெறுப்புக்குரிய நிறவெறி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தனது இலட்சிய வாழ்வின் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்தார். இவர் தென் ஆபிரிக்க மக்களுக்கு மட்டுமன்றி தென் ஆபிரிக்க மக்கள் யாவருக்கும் புதிய வாழ்வு,கௌரவம்,சுதந்திரம் என்பவற்றை கொண்டுவந்தார்.

இந்த மாமனிதனுக்கு நாம் செலுத்தக்கூடிய அதிகூடிய அஞ்சலி அவர் நேசித்த ஜனநாயகம், பல்வகைமை,ஒற்றுமை என்பவற்றை பாதுகாப்பதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனுதாப செய்தி தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Related Posts