வட மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரனும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் கொழும்பில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு கொழும்பிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர், ஜனநாயக மக்கள் முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள், மரியாதை நிமித்தம் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்தனர்.
இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர்கள் நல்லையா குமரகுருபரன், எஸ். ராஜேந்திரன், மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் வேலணை வேணியன், சண். குகவரதன், பிரியாணி குணரத்ன, கே.ரி. குருசாமி, எஸ். பாஸ்கரா, லோரன்ஸ் பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றனர்.
இச்சந்திப்பு குறித்து மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
பரஸ்பர வேலைப்பளு காரணமாக தள்ளி போடப்பட்டிருந்த இந்த சந்திப்பு இன்று (நேற்று) இடம்பெற்றது. இதன்போது, வடக்கில் மக்கள் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டு ஆட்சி பொறுப்பில் இருக்கும் கூட்டமைப்பு நிர்வாகத்தை, முடக்கும் அரசின் செயல்பாடுகள் பற்றிய நிலைமைகளை முதல்வர் விளக்கி கூறினார்.
அரசாங்கம் உலகத்திற்கு ஒன்றை சொல்லுவதும், உள்நாட்டில் இன்னொன்றை செய்வதும் என்ற இரட்டை நிலைபாட்டில் செயல்படுவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். அதேவேளை சிங்கள இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மத்தியில் ஒரு சிறு புரிந்துணர்வு தென்படுவதாகவும், குறிப்பாக அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண, வாசுதேவ, டிவ் குணசேகர ஆகியோர் தம்முடன் புரிந்துணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார்.
வடக்கின் உண்மை நிலைமைகள் பற்றி ஜனநாயக மக்கள் முன்னணி சிங்கள மக்களுக்கு எடுத்து கூறுவதை வரவேற்ற அவர், இந்த பணியை இன்னமும் வலுவாக முன்னெடுத்து, உண்மை தகவல்களை சாதாரண சிங்கள மக்களுக்கு எடுத்து கூறும்படி வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்வரும் மேல்மாகாணசபை தேர்தலில், மேல்மாகாணத்தின் கொழும்பு, கம்பாஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நமது கட்சி போட்டியிடுவது பற்றியும், இது தொடர்பில் அடுத்த வாரம் கொழும்பில் கூடவுள்ள எங்கள் அரசியல்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுப்படவுள்ளது பற்றியும் நான், முதல்வருக்கு எடுத்து கூறினேன்.
தமிழினத்தின் நலன் கருதி, தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜனநாயக மக்கள் முன்னணியும் ஒன்றை ஒன்று ஆதரித்து புரிந்துணர்வுடன் செயல்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் மிக தெளிவாக இருப்பதாக விக்னேஸ்வரன் கூறினார். அத்துடன் தத்தமது பிராந்தியங்களில் இரண்டு கட்சிகளும் பலமாக இருப்பது காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் நான் கடந்த மாதம் முதல்வருக்கும், ஜனாதிபதிக்கும் எழுதி அனுப்பியிருந்த கோரிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
கைதிகள், தடுத்து வைக்கப்படிருப்போர் தொடர்பான விபரங்களை சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் எதிர்பார்த்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். இந்த அதிமுக்கிய மனிதநேய விவகாரம் தொடர்பில் இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பில் விரைவில் ஒரு செயற்பாட்டு குழு அமைக்கப்பட்டு காரியங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று விக்னேஸ்வரன் கூறினார்.
வடக்கு மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு நமது கட்சி அளித்து வரும் ஆதரவை நாம் தொடர்ந்து வழங்கி வரும் அதேவேளையில், தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பிலும், வடக்கு மாகாணசபை முடக்கப்படுவது தொடர்பிலும் உண்மை நிலவரங்களை நாம் தொடர்ந்து சிங்கள மக்களுக்கு எடுத்து கூறுவோம் என நான், முதல்வர் விக்னேஸ்வரனுக்கு உறுதியளித்தேன் என்றார்.