வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், றெக்ஷியனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞர் ஆகிய மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.எம்.மகேந்திரராஜா உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன்கடந்த மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நெடுந்தீவினைச் சேர்ந்த நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நேற்று (03) நள்ளிரவு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினராலும், றெக்ஷிசனின் மனைவி ஊர்காவற்றுறை பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மூவரும் இன்று (04) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், கமலேந்திரனிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதன்போது மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களினை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.