பொலிஸாரினால் அச்சுறுத்தல்!, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Human_rightsதமது குடும்ப உறுப்பினர்களுக்கு பொலிஸாரினால் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பருத்தித்துறை இராஜ கிராமத்தினைச் சேர்ந்த குடும்பம் ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

பருத்தித்துறை இராஜ கிராமத்தினைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்வதற்காகச் நெல்லியடிப் பொலிஸார் மூவர் முச்சக்கரவண்டி ஒன்றில் சிவில் உடையில் சென்றுள்ளனர்.

இதன்போது, மேற்படி நபரின் வீட்டிலிருந்த பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதனால் அவர்கள் இருவரும் காயமடைந்ததாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குப் பின்னால் வேலை செய்துகொண்டிருந்த நல்லதம்பி இந்திரகுமார் (26) சத்தம் கேட்டு வந்தவேளை, இவரையே கைது செய்ய வந்ததாகக் கூறி பொலிஸார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து மேற்படி இரு பெண்களும் பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளரிடம் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கூறினர்.

இரு பெண்களையும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு பதிவாளர் தெரிவித்ததையடுத்து, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அவ்விரு பெண்களும் முறைப்பாடு செய்துள்ளனர்.

தொடர்ந்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். கிளையிலும் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.

Related Posts