திருநெல்வேலியில் அமைந்துள்ள வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் வீட்டின் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஐங்கரநேசன்,
அதிகாலை 3 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் வீட்டின் வாசல் பகுதியில் நின்று வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர். இதில் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் சில சேதமடைந்துள்ளன.
மாவீரர் நாளை நினைவு கூரும் முகமாக நேற்றைய தினம் மர நடுகை நிகழ்வை மேற்கொண்டதன் பின்னணியில் தான் இத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்று இருக்கலாம். இது ஒரு சகிக்க முடியாத காட்டுமிராண்டி தனமான நாகரிகமற்ற செயலாகும்.
மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளின் மீது தொடர்ந்தும் அரசு தாக்குதலை நடாத்தினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் பாதையை தோற்றுவிக்கும்.
இதேவேளை, கரவெட்டி பிரதேச தவிசாளர் வீடு, வல்வெட்டித்துறை உபதவிசாளர் வீடு, வலி.மேற்கு தவிசாளர் வீடு, மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வீடு என கடந்த இரு தினங்களில் யாழில் மக்கள் பிரதிநிதிகள் நால்வரின் வீடுகளின் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.