மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதனை உறுதிப்படுத்தும் தேவைப்பாடு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு உள்ளதென்பதை அறிவுறுத்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வடக்கில் கடந்த வாரம் நடைபெற்றிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் இரண்டில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமல் இருந்ததை அடுத்தே ஜனாதிபதி இவ்வாறான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடைபெற்றிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றிருந்ததுடன் மேற்படி இரண்டு கூட்டங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிஷ்கரித்திருந்த அதேசமயம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவற்றுக்கு சமூகமளித்திருக்க வில்லையென்றே பதிவாகியிருந்தது.
மேற்படி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் துணைத் தலைவராக விக்னேஸ்வரன் விளங்குவதால் குறித்த கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளுமாறு எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியே ஜனாதிபதி தற்போது மேற்படி கடிதத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கைப் பிரகடனத்தின் கீழ் வட மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ள போதிலும் இலங்கையில் பெரும்பான்மையான மக்களின் வாக்குகளையும் ஆதரவையும் பெற்றிருந்த மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கடமைப்பாடு விக்னேஸ்வரனுக்கு உள்ளதெனவும் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் ஆதாயம் கருதியே மேற்படி கூட்டத்தைப் புறக்கணித்துள்ள அதேவேளையில் அதில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமல் இருந்த காரணங்கள் விவாதத்திற்குரியவையெனவும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பாராயின் முக்கியமான சில கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு தீமானங்கள் எடுக்கப்பட்டிருக்க முடியுமெனவும் தெரிவித்திருந்தார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் அமைச்சர் தேவானந்தா உரையாற்றுகையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பாராயின் இந்திய வீடமைப்பு செயற்றிட்டம் குறித்த முக்கியமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கக் கூடுமெனவும் குறிப்பிட்டார்.