ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது நேற்று காலை கல்வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை கரம்பன் கிழக்கில் அமைந்துள்ள தேவ வார்த்தை மிஷனரி சபை என்ற கிறிஸ்தவ சபையிலேயே காலை ஆராதனை நடை பெற்றுக் கொண்டிருந்த வேளை இந்த கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை 9.40 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது சபையில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
சம்பவத்தின்போது 15 வயதுடைய ஆனந்தராசா பியூலா பாடசாலை மாணவியின் வலது கண்ணில் கல்லொன்றுபட்டதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக கல் வீச்சு நடாத்திய ஒருவர் சந்தேகத்தின் பெயரில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தின்போது தாக்குதல் மேற்கொண்டவர்களிடம் சமரசம் செய்ய முயன்ற பெண்கள் மீதும் சாணகம் மற்றும் தடிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தேவாலயத்தின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளது.
குறித்த தேவாலயம் யுத்தம் காரணமாக தற்காலிகமாகவே இந்த பகுதியில் இயங்கி வந்ததோடு, எதிர்வரும் தைமாதம் முதல் அருகிலுள்ள அவர்களது சொந்த காணியில் அமைக்கப்பட்டுவரும் புதிய தேவாலயத்திற்கு மாற்றப்படவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.