யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை இலக்கத் தகடுகள் அற்ற பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
காணாமல்போன உறவொன்றின் சகோதரியான 13 வயது சிறுமியின் கன்னத்தில் காவல்துறை அறைந்ததாக அச்சிறுமி சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அழுதவண்ணம் முறைப்பாடுசெய்தார்.
இந்த தாக்குதலில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் தள்ளி விழுத்தப்பட்டுள்ளனர்.சனல் 4 ஊடகவியலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தியோர்களுடன் சந்தித்தனர். அவ்வேளை காணாமல் போனோர் உறவினர்கள் தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கதறி அழுதனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையினில் அவர்கள் பிரிட்டன் பிரதமரை சந்திக்காத வகையில் பிரதம நூலகம் முன்பதாக பொலிஸ் வாகனங்களை நிறுத்தி அவர்களை வழிமறித்து வைத்திருந்தது. மறுபுறத்தே அரச ஆதரவு படைத்தரப்பின் ஏற்பாட்டில் 50 பேரைக்கொண்ட கும்பலொன்று சனல்-4 இற்கு எதிராகவும் அரசிற்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஏற்பாடாகியிருந்தது. பிரிட்டிஸ் பிரதமர் அவர்களை பார்வையிடும் வகையில் நூலக நுழைவாயிலினில் இவ்வேற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே தமிழத்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஸம் எழுப்பியிருந்தனர். மூடப்பட்ட காரினுள் மக்களை சந்திக்காது தப்பி செல்ல முற்பட்டவேளை இந்நெருக்கடிக்குள் அவர் அகப்பட்டுக்கொண்டார். எனினும் பின்னர் அவரும் நூலக பின் கதவினால் சென்றிருந்தார்.