மூன்று தசாப்தத்துக்கும் மேலாக உள்நாட்டுப் போரினால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முடங்கிப் போயிருந்த போதும், ஏற்றுமதி உற்பத்தித் துறையில் எமது நாடு கணிசமான முன்னேற்றத்தைக் கண்டு வந்துள்ளது.
இவ்வாறு கொழும்பு சினமன் கிராண்ட ஹோட்டலில் ஆரம்பமான பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
உற்பத்தியும், பெறுமதி சேர்க்கையும் எனும் தலைப்பில் உரையாற்றிய அமைச்சர், எமது அரசு உற்பத்தியையும், உற்பத்தியின் பெறுமதி சேர்க்கையையும் அதிகரிப்பதற்காக பல முனைகளிலும் முயற்சித்து வருகின்றது.
உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பல்வேறு விதமான வரிச்சலுகைகளையும் ஊக்குவிக்கும் பங்களிப்புக்களையும் செய்து வருகின்ற அதே வேளை, பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, பெருந்தெருக்கள், துறைமுகங்கள், தொழிற் பேட்டைகள் போன்ற பாரிய உட்கட்டுமான பணிகளை கட்டியெழுப்புவதோடு மனித ஆற்றலை மேம்படுத்துவதற்காகவும் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களே மொத்த ஏற்றுமதியின் முதன்மையிடத்தை வகித்துள்ள நிலைமை மாறி, இன்று உற்பத்தித்துறையானது ஏற்றுமதி வருமானத்தில் விவசாயத்துறையை விட முன்னிலை வகிக்கின்றது.
2020 ஆம் ஆண்டில் எமது நாட்டின் பொருள்உற்பத்தித்துறை மொத்த உற்பத்தியின் 40 வீதத்தை அடைவதை இலக்காகக் கொண்டு அரசு உற்பத்தித்துறைக்கும், உற்பத்தி தொடர்பான பெறுமதி சேர்க்கைக்கும் சகல ஊக்குவிப்புகளையும் வழங்கி வருகின்றது.