கடந்த காலங்களில் கல்வியின் மேன்மையைப் பறைசாற்றிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தின் கல்விநிலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக பலரும் ஒப்புக் கொள்கின்றனர்.
இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும். ஆசிரியர்கள் தமது பணி அர்ப்பணிப்புடனானது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் ரி.குருகுலராஜா தெரிவித்தார்.
யாழ்.புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் சாதனையாளர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் வித்தியாலய அதிபர் அருட் செல்வி ஜீவந்தி தலைமையில் கடந்த வியாழக்கிழமை வித்தியாலய அரங்கில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட மாகாணக் கல்வி அமைச்சர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
ஆசிரியர் நியமனம் பெற்றவுடன் இடமாற்றம், அதையடுத்து சம்பள உயர்வு போன்ற விடயங்களிலேயே அக்கறை காண்பிக்கப்படுகின்றது. இந்த நிலைமைகளில் மாற்றம் தேவை.
பல தரப்பட்ட விடயங்களைக் கடந்து எம்மை நாமே வழி நடத்த ஒரு அமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளோம். வடமாகாணத் தமிழ் மக்களின் வாழ்வுக்கான விடிவெள்ளியாக அமைந்துள்ள மாகாண சபையின் கல்வி அமைச்சராகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
கடந்த காலங்களில் இங்கு விளையாட்டுத் துறையும் சிறந்து விளங்கியது. தற்போது அதன் நிலையும் தளர்வடைந்துள்ளது. வீட்டுக்கு வெளியே விளையாட நண்பர்களுடன் சேர அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் மாணவர்களின் ஆற்றல் மட்டுப்படுத்தப்படுகிறது.
தனி மனித ஆற்றலும் சிந்தனையும் வளப்படுத்தப்பட வேண்டும். கல்விக் கொள்கை மாற்றப்பட வேண்டும். தற்போது தகவல்கள் எல்லைப் பகுதிகளுக்கும் விரைந்து கிடைக்கின்றன. எமது மாகாணம் முன்னைய காலங்களைப் போன்று பல துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும்.
இந்தப் பாடசாலையில் எமது பிள்ளைகள் படிப்பதற்கு இடம் கிடைக்காதா என்று பெற்றோர் ஏங்கும் நிலைக்கு புனித பொஸ்கோ வித்தியாலயம் சாதனை மிகுந்ததாக உள்ளது.
அதிபரும், ஆசிரியர்களும் சேவைத்திறன் கொண்டவர்களாக மாணவர்களின் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.