வட மாகாண முதலமைச்சர் – ஜ.ஓ.எம் பிரதிநிதி சந்திப்பு

vickneswaranவட மாகாணத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான உதவி திட்டங்களை வழங்குவதற்கு சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு முன்வந்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி குலுசிப்பா குரோசெற்ரிற்கும் இடையிலான சந்திப்பு யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கடந்த பல வருடங்களாக மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பு தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 2013 டிசெம்பருடன் நிறைவடையவுள்ளதால், 2014ஆம் ஆண்டு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவ்வேலைத்திட்டங்களை இனங்கண்டு செயற்படுத்துவதற்கான வழிமுறைகள், ஆலோசனைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

அந்த வகையில் குடிநீர், விவசாயம், சுகாதாரம், கால்நடை, உட்கட்டுமானம் தொடர்பான பணிகளை முன்னெடுக்கவுள்ளதுடன் இவ்வேலைத்திட்டங்களுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விசேடமாக போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்கள், விளையாட்டுத் துறைகளை ஊக்குவித்தல் மற்றும் வாழ்வாதார உதவிகள் உள்ளிட்டவற்றைச் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

இவ்வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு எத்தனை மில்லியன் என தெரிவிக்கப்படாத போதும், ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை சீர்திருத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts