வன்னியில் 3 கிராமங்களில் தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டுள்ளதாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சேர்ந்த நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு அறிக்கையிட்டுள்ளது.
இந்த அறிக்கை வத்திக்கானின் இலங்கைக்கான பிரதிநிதி கலா நிதி ஜோசப் ஸ்பிறிற்றேரி ஆண்டகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் வலைப்பாடு, வேரவில், கிராஞ்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பலருக்குப் பலவந்தமாகக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
“கடந்த ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி கிளிநொச்சியில் இருந்து வந்த 20 தாதியர்கள், குடும்ப நல மாதுக்கள் ஆகியோர் இந்தக் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று 5 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வேரவில் மாவட்ட மருத்துவ மனைக்கு வருமாறு அறிவித்துள்ளனர்.
அவர்கள் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் போது “கிளினிக்’ அட்டைகளுடன் வருமாறும் அவர்களுக்கு பணிக்கப்பட்டது. 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகளின் நிறையை அளக்க வேண்டியிருப்பதாகவும் தாய்மாருக்கு சொல்லப்பட்டது.
மருத்து மனைக்கு அவர்கள் வந்து சேர்ந்ததும் நீண்ட காலத்துக்கு கருத்தரிக்காது இருப்பதற்கான கட்டுப்பாட்டு முறைமையை ஏற்றுக்கொள்ளுமாறு பலவந்தப்படுத்த ஆரம்பித்த வைத்தியரும் மாதுக்களும் அவர்களது கைகளில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான ஊசியை ஏற்றியுள்ளனர்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பலவந்தமான சிகிச்சையை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லை எனத் தெரிவித்த பெண்களுக்கு, எதிர்காலத்தில் குறித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாது போகும் எனவும் மிரட்டப்பட்டுள்ளதாக அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் தாய்மார் ஒத்துழைக்கவில்லையாயின் அவர்களது கணவன்மாரை அழைத்துவந்து குடும்பக்கட்டுப்பாட்டு சிகிச்சை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கை மருத்துவர் மற்றும் தாதியர் மீது கடுமையாகக் குற்றம் சாட்டுகிறது.
இதனையடுத்து பெரும்பாலான பெண்கள் சிகிச்சையை ஏற்றுக்கொண்டனர் எனவும் இவ்வாறான விவகாரங்களை நடைமுறைப்படுத்தும் அரச கொள்கை குறித்து தமது குழு சந்தேகப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இந்தப் பகுதியில் சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகக் கூட இது இருக்கலாம் எனவும் அந்த அறிக்கை எதிர்வு கூறுகிறது. இந்தக் கிராமங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள்.
இந்த நிலையில் இவ்வாறான குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை கத்தோலிக்கர்களாகிய தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் கருத்தை உடனடியாக பெறமுடியவில்லை.
இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கான எந்தவிதமான உத்தரவும் இல்லாத நிலையில் இப்படி ஒரு தகவல் வந்திருப்பதாகவும் , இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரான ஆர்.ரவீந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.