வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமது கட்டுப்பாட்டில் உள்ள மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி தமது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டியது அவசியமென்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று சந்தித்த போது தெரிவித்தார்.
வடமாகாணசபை குறித்து இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துகள் வருமாறு
புதிய மாகாணசபை தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து வட பகுதியில் இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. இராணுவ சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.
பொலிஸாரே அப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கின்றனர்.
முதலமைச்சரின் நேரடி அதிகாரத்தின் கீழ் பொலிஸ்படை இல்லாதிருந்தாலும், வடபகுதியில் இப்போது அதிகரித்து வருகின்ற சமூகவிரோத குற்றச்செயல்களை கட்டுப்படுத்த வடமாகாண சபை நிர்வாகம் அந்தந்த பிரதேசத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உதவ வேண்டும்.
இதுவிடயத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரடியாக கவனம் செலுத்தி இந்த சமூக பொலிஸ் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி குற்றச் செயல்களை ஒழித்துக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடபகுதி பெண்களை இராணுவத்தினர் பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறார்கள் என்று பலரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வெவ்வேறு ஸ்தாபனங்களான U.N.H.C.R மற்றும் ஓர்சார்ட் அமைப்புகள் வடபகுதியில் உள்ள பெண்கள் மத்தியில் ஆய்வுகளை நடத்தியது.
இதன்போது, 80 சதவீதமான பெண்கள் தங்கள் கணவன்மார் தொழில் பார்ப்பதற்கு வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தங்களுக்கு இராணுவத்தினர் எந்தவிதமான தொல்லையையும் கொடுக்கவில்லை என்றும் தாங்கள் அமைதியாக நிம்மதியுடன் வாழ்கிறோம் என்றும் கூறியதாக இவ்விரு அமைப்புகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழ்நாட்டுக்கு சென்று, இராணுவம் வட இலங்கையில் தமிழர்களின் காணியை அபகரித்து இருக்கிறதென்றும், இதற்கு எதிராக தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்று தெரிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர்,
இவ்விதம் வெளிநாடுகளுக்கு சென்று தப்பபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு பதிலாக அரசாங்கத்துடன் பேசினால் திரு.சம்பந்தனுக்கு உண்மை நிலை புரியும். மக்களின் காணியை இராணுவம் இலவசமாக பயன்படுத்தவில்லை என்பது திரு.சம்பந்தனுக்கு தெரிந்திருக்காது.
இராணுவம் அந்தக் காணிகளுக்கான வாடகையை அவற்றின் உரிமையாளர்களுக்கு ஆரம்பம் முதல் வழங்கி வருகின்றது. மயிலிட்டியில் உள்ள காணிகளையும் விரைவில் இராணுவம் அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி கொடுக்கும்.
பலாலி முகாமையும் காங்கேசன்துறை பிரதேசத்தையும் உள்ளடக்கிய பகுதியிலேயே பெருமளவு நிலத்தை இராணுவம் தேசியப் பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறது. இவற்றில் பெரும்பகுதியான நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமானவை. இப்போது அரசாங்கம் படிப்படியாக தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான நிலத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்கி வருகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தனியார் காணியை அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி கொடுக்க முடியாமல் இருந்தால் அரசாங்க நில மதிப்பீட்டாளர் நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் பொதுமக்களுக்கு நியாயமான நஷ்டஈடு வழங்கப்படும். இவ்வாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.