“தமிழின விடுதலைக்காகப் போராடி – தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த தமிழ் உறவுகளான மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் படையினரின் ஆக்கிரமிப்பு தொடருமானால் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவர். இதை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் சிவில் சமூகமும் கடும் கொதிப்புடன் கருத்துத் தெரிவித்துள்ளன.
“மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி செலுத்துவது தமிழ் மக்களின் உரிமை. இதைத் தடுத்துநிறுத்துவது அநாகரிகமானது. இது மிகப்பெரும் மனித உரிமை மீறல்; காட்டு மிராண்டித்தனமான செயல்” என்றும் அவை குமுறியுள்ளன.
கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மற்றும் முல்லைத்தீவு தேராவில் ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த சில தினங்களாகப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
துயிலும் இல்லங்களைச் சுற்றி முட்கம்பிவேலி போடப்பட்டு அங்கு படை முகாம்களை அமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் சிவில் சமூகமும் தமது நிலைப்பாடுகளைத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எனவே, இந்த மாகாண சபையின் கட்டமைப்பு முழுமையாக உருவாக்கப்பட்ட பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்களை ஆக்கிரமிக்கும் படையினரின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து தீர்க்கமான ஒரு முடிவை எடுப்போம்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தில் மரணித்த தமது உறவுகளின் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதும் ஈமக்கடன் செய்வதும் தமிழ் மக்களின் கடமை, உரிமை.
இதை அரசும் அதன் படைகளும் தடுப்பதும், துயிலும் இல்லங்களை உடைப்பதும் அநாகரிகமான செயலாகும். இவை தமிழ் மக்களைக் கொதிப்படையச் செய்யும்.
படையினரின் இந்த அநாகரிகமான செயல்களுக்கு விரைவில் வடக்கு மாகாணசபையில் முடிவு கட்டுவோம்” – என்றார்.
தமிழ் சிவில் சமூகத்தின் சார்பில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கில் தேவையற்ற நடவடிக்கைகளில் படையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மாவீரர் துயிலும் இல்லங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. இவற்றை உடைத்து -ஆக்கிரமிப்பது அநாகரிகமானது.
தமிழ்ச் சமூகத்திற்காக உயிர்கொடுத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவிடாமல் தடுத்து நிறுத்துவது எந்த வகையில் நியாயமானது?
தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடியவர்களின் இறந்த உடல்கள் இளைப்பாறக்கூட இந்த மண்ணில் இடமளிக்கக்கூடாது என்பதில் அரசும் அதன் படைகளும் குறியாகவுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள் இருக்கும் இடத்திலும் இந்த அரச தரப்பு தமது பழிவாங்கலைக் காட்டுகின்றது.
உலகம் முழுவதும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்த – அஞ்சலி செலுத்த பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இலங்கையில் மட்டும் தமிழ் இனத்திற்கு இந்தச் சுதந்திரத்தை வழங்காமல் அரசும் அதன் படைகளும் தமது அடாவடியைக் காட்டுகின்றன. இது பாரிய மனித உரிமை மீறலாகும், காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.
எனவே, தமிழ் மக்களின் உறவுகளான மாவீரர்களின் துயிலும் இல்லங்களைச் சுற்றி முட்கம்பிவேலி போட்டு அங்கு முகாம்களை அமைக்கும் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடருமானால் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுவார்கள். இதை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது” – என்றார்.