தமிழ் மக்கள் தேர்தலில் அளித்திருந்த ஆணைக்கு அமைவாக வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அரசிடமிருந்து பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
வலி.மேற்கு பிரதேச சபையின் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ் மக்கள் உரிமைகளைப் பெறுவதற்காக 60 வருடங்களாக போராடி வருகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் மற்றும் ஆயுத ரீதியிலான போராட்டங்கள் அனைத்தும் பேரினவாதிகளால் முள்ளிவாக்காலில் சிதைக்கப்பட்ட பின்னர், எங்களைத் தோற்றுப்போன இனமாகச் சித்தரித்து எமக்கான உரிமைகளை இந்த அரசாங்கம் வழங்க மறுக்கின்றது.
போர் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்த பொழுதிலும் வடக்கிலிருந்து இராணுவம் இன்னமும் அகற்றப்படவில்லை. வடமாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற காலங்களில் இராணுவம் ஜனநாயகத்தினை மீறி தேர்தலைக் குழப்பி அராஜகங்களை மேற்கொண்டது.
வடக்கில் தற்பொழுதும் இராணுவ அராஜகங்கள் தொடர்கின்றன. எனவே, வடக்கிலிருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேற்றி தமிழ் மக்களுக்கு அரசியல், பொருளாதார வாழ்வியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக வடமாகாண சபையின் உறுப்பினர்கள் தொடர்ந்து போராட வேண்டும்.
தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழக்கூடிய வகையில் உரிமைகளை வழங்க வேண்டும் என்பதுடன், மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட சகல அதிகாரங்களையும் வழங்க தென்பகுதியினர் முன்வர வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
வலி.மேற்கு சங்கானை பிரதேச சபையின் புதிய கட்டடம் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் திறந்துவைப்பு