வடக்கில் படையினரால் தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டினை இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய மறுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுக்காலப்பகுதி வரை படையினர் சம்பந்தப்பட்ட ஐந்து பாலியல் வன்முறை சம்பவங்களே இடம்பெற்றுள்ளன.
இந்தக்காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் தொடர்பில் 119 சம்பவங்கள் வரை இடம்பெற்றன. இந்தநிலையில் படையினர் சம்பந்தப்பட்ட ஐந்து பாலியல் வன்முறை சம்பவங்களில் நான்கு சிங்கள பெண்களும் ஒரு தமிழ் பெண்ணும் பாதிக்கப்பட்டனர்.
மேலும் 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 256 பாலியல் வன்முறை சம்பவங்கள் வடக்கில் இடம்பெற்றுள்ளன. இதில் 6 சம்பவங்கள் மட்டுமே படையினர் சம்பந்தப்பட்டவையாகும்.
அதிலும் மூன்று சிங்கள பெண்கள் இரண்டு தமிழ் பெண்கள் மற்றும் ஒரு முஸ்லிம் பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சம்பவங்களில் தொடர்புடைய படைவீரர்கள் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ருவான் வணிகசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.