வடமாகாணத்தின் சுகாதார துறையில் ஊழல் செயற்பாடுகள், சுயநலமிக்க நடவடிக்கைகள் எதுவுமே இடம்பெறக்கூடாது’ என வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற வைத்திய அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இச்சந்திப்பு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘இந்த மாவட்டத்தின் சுகாதார வசதிகளுக்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறதோ அவற்றை நிவர்த்தி செய்து சிறந்த சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வடமாகாண அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கே முதலாவது விஐயத்தை மேற்கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றேன்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் அடிப்படையில் சுகாதாரத் துறைசார்ந்த செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு, ஊனமுற்றவர்கள் மற்றும் யுத்தத்தால் அங்கவீனமடைந்தவர்களுக்கு விசேட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
இங்குள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் இவர்களை முதன்மைப்படுத்தியே அமைய வேண்டும். குறிப்பாக அவர்களது பராமரிப்பு மிகவும் முக்கியமானது. இதற்காக விசேட குழு அமைக்கப்பட்டு வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும்.
இந்த மாவட்டத்தின் நலனைக் கருத்திற்கொண்டு மாங்குளம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் எனது அலுவலகம் அமைத்து செயற்படவுள்ளேன். இதற்கு சுகாதாரத் தரப்பினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்றார்.
முல்லைத்தீவு, மாவட்டத்திற்கு செவ்வாய்கிழமை விஜயம் மேற்கொண்டு அமைச்சர், அங்கு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது முல்லை மாவட்டத்தின் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதித் தவிசாளருமான அன்ரனி ஜெயநாதனும் கலந்துகொண்டார்.