யாழ்ப்பாணம் குடத்தனை வடக்கினைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் மீது ஆண் பொலிசார் கொடூரமாகத் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.திருமதி யோகராசா கமலாதேவி (வயது 50) என்ற பெண்ணே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த பெண்ணின் மகனான யோகராசா கஜேந்திரன் (வயது 19) மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, குடத்தனையிலுள்ள அவரது வீட்டிற்கு வாகனத்தில் கொண்டு வந்த நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் அறுவர் அவரது தாயான கமலாதேவி மற்றும் சகோதரியின் முன்னிலையில் மயங்கி விழும்வரை தாக்கியுள்ளனர்.
அதைத் தடுக்க முற்பட்ட தாயாரை உதைத்துத் தள்ளியதுடன் பெண் பொலிசார் யாரும் கூட வராத நிலையில் அவரைக் கடுமையாகத் தாக்கி வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
பதினாறு ஆயிரம் ரூபா பணம் செலுத்தினால் மாத்திரமே கமலாதேவியை விட முடியும் என்று பொலிசார் கூறியதால் அப்பணம் செலுத்தப்பட்டதன் பின்னரே அவரை விடுவித்துள்ளனர்.
மேற்படி பெண் தற்போது மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்விடயம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களிடமும் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.