காணாமற்போனோரின் உறவுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட உள்ளது என்றும் எனவே காணமற் போனோரின் உறவுகள் இதில் அக்கறை செலுத்தி பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு மன்னார் பிரஜைகள் குழு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்திருந்தது.
இதற்கமைய காணாமற்போனோரின் உறவுகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பதிவு செய்து ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்க மன்னார் பிரஜைகள் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக காணாமற்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மன்னார் பிரஜைகள் குழு இணைந்து பதிவு நடவடிக்கைகளில் செயற்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயணம் மேற்கொள்ளும் இந்தக் குழுவினர் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் சகல இடங்களிலும் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
எனவே காணமற்போனோரின் உறவுகள் பொலிஸ் பதிவு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட பதிவுகளின் பிரதிகள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இந்தப் பதிவு நடவடிக்கைகள் “அருட்கால் இல்லம்’, இல.81, குருசோறோட், என்ற முகவரியில் இன்றும், நாளை செவ்வாய்க்கிழமை “மேய்ப்பு பணி இல்லம்’, கிளிநொச்சி பழைய மக்கள் வங்கி முன்பாகவும் இடம்பெறவுள்ளன.
இந்தப் பதிவுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் மன்னார் பிரஜைகள் குழுவின் செயலரின் 0771139897 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.