பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வடமாகாண சபை அமைச்சரவை விபரம் நேற்று மாலையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. அதில் பொன்னுத்துரை ஜங்கரநேசன் விவசாய அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினர் அதற்கு இன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
‘ஐங்கரநேசன் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டது தமிழரசுக் கட்சியின் முடிவு மட்டுமே என்பதுடன், அது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சம்மதத்துடன் நடைபெறவில்லை’ எனவும் கூறினார்.
ஆனால் ஐங்கரநேசன் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் உறுப்பினரல்லாத போதும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில் ஐங்கரநேசனே அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.