வடமாகாண சபை நிர்வாகமானது அரசியலுடன் பொருளாதாரத்தினையும் இணைத்து தமிழ் மக்களுக்கு ஒரு உடனடி நிவாரணத்தினை வழங்குவது சவாலான விடயம்.
இச் சவாலை எதிர்கொள்வதிலேயே அதன் வெற்றியும் தங்கியுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
வடக்கில் அரசியல் வெற்றியைச் சாதித்த கூட்டமைப்பு பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களில் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் என்ன கருத்துக்களைக் கொண்டுள்ளனர் என்பது பற்றி ஊடகவியலாளர் தியாகராஜா நிரோஷ் கேட்டறியப்பட்ட கருத்துக்களில் முக்கியமானவை,
கொழும்புப் பல்கலைக் கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கோ. அமிர்தலிங்கம் அவர்கள், வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் பற்றி தனது கருத்துப் பகிர்வில் தெரிவித்துள்ளதாவது,
வடமாகாண சபை நிர்வாகமானது அரசியலுடன் பொருளாதாரத்தினையும் இணைத்து தமிழ்மக்களுக்கு ஒரு உடனடி நிவாரணத்தினை வழங்குவது சவாலான விடயம் என்ற போதும் அது மிகவும் அவசியமாகவுள்ள நிலையில் இச் சவாலை எதிர்கொள்வதிலேயே அதன் வெற்றியும் தங்கியுள்ளது.மேலும், அனைவரும் எதிர்பார்த்ததைப் போல் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று விட்டது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை முழுமையாகவும் சுதந்திரமாகவும் இயங்க முடியாமல் போனதன் காரணமாக சுதந்திர இலங்கையின் வரலாற்றிலேயே ஒரு அரசியல் ரீதியான நிர்வாக அமைப்பினை தமிழ் மக்கள் நிர்வகிக்கப் போகும் முதலாவது சந்தர்ப்பமாக இதுவாக இருக்கப் போகின்றது.
இது ஒரு அரசியல் ரீதியான வெற்றியாகக் காணப்பட்டாலும் பொருளாதார ரீதியான சவால்கள் நிறையக் காத்திருக்கின்றன.
வடமாகாண சபைக்கு ஒரு நிலையான கட்டிடம் கூட இல்லாத நிலைமையுடன் சவால்கள் ஆரம்பமாகி விட்டன.
இலங்கையில் வடமாகாணத்திற்கு மட்டும் தற்போது வரை மாகாண இறைவரித் திணைக்களம் கிடையாது.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின்படி மாகாண சபைகளுக்கு சர்வாம்ச ரீதியிலான வரிவிதிக்கும் அதிகாரமோ வெளிநாடுகளிலிருந்து கடன் பெறுகின்ற அதிகாரமோ கிடையாது.
மாகாண சபைகளுக்கு ஒரு வீதம் புரள்வு வரி விதிக்கும் முன்பிருந்த அதிகாரமும் தற்போது நீக்கப்பட்டு விட்டது.
தற்போது சொத்துக்கள் கைமாற்றப்படும் போது விதிக்கப்படும் முத்திரைத் தீர்வை மட்டுமே மாகாண சபைகளுக்குரிய பிரதான வரிவருமான மூலமாகக் காணப்படுகின்றது.
வடமாகாண இறைவரித் திணைக்களம் தற்போது காணப்படாத காரணத்தினால் இது அமைக்கப்படும் வரை வடமாகாண சபைக்கு முத்திரைத் தீர்வை வருமானம் கிடைப்பதிலும் தாமதங்கள் ஏற்படப் போகின்றன.
இலங்கையிலுள்ள மாகாண சபைகள் மத்திய அரசாங்கம் வழங்கும் திரட்டு நிதியிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கின்றன.
2011 ஆம் ஆண்டு தரவுகளின் படி மேல் மாகாணமானது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 44.4 பங்களிப்பினைச் செய்திருக்கையில் வட மாகாணமானது 3.7 வீத பங்களிப்பினையும் கிழக்கு மாகாணமானது 5.7 வீத பங்களிப்பினையும் செய்துள்ளன.
வட மாகாணம் இலங்கைப் பொருளாதாரத்திற்கு குறைந்தளவிலான பங்களிப்பினைச் செய்வதன் காரணமாக அதிகளவான திரட்டு நிதியினை வடமாகாண சபை பெறுவதானது மத்திய அரசாங்கத்திற்கும் வடமாகாண சபைக்கு இடையில் நிலவப் போகின்ற சுமுக உறவினிலேயே தங்கியிருக்கப் போகின்றது.
வெளிநாட்டு உதவிகள் கூட மத்திய அரசாங்கத்தின் திறைசேரி ஊடாகவே வழங்கப்பட வேண்டிய ஏதுநிலைகள் காணப்படுகின்றன.
இவை யாவும் பொருளாதார ரீதியாக வடமாகாண சபை எதிர்நோக்கப் போகும் சவால்களைக் குறித்துக் காட்டுகின்றன.
முப்பது வருட காலம் யுத்தத்தினால் மிகப்பெரிய அழிவுகளைச் சந்தித்து களைப்படைந்துள்ள தமிழ் மக்கள் பொருளாதார ரீதியான எழுச்சியினை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இவ்விடத்தில் வடமாகாண சபை நிர்வாகமானது அரசியலுடன் பொருளாதாரத்தினையும் இணைத்து தமிழ்மக்களுக்கு ஒரு உடனடி நிவாரணத்தினை வழங்குவது சவாலான விடயமெனினும் காலத்திற்குத் தேவையான முயற்சியாகும்.