தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை தாங்கி கொண்டிருக்கும் சுதர்சிங் விஜயகாந் கொள்ளைக்கார குழுத் தலைவர் என்பதுடன் அவர் தற்காலிக ஊழியர்களிடம் பண மோசடி செய்துள்ளார்’ என யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.
தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரதம் தொடர்பில் யாழ். மாநகர சபையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
‘தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமைதாங்கும் தலைவர் சுதர்சிங் விஜயகாந் கொள்ளைக்கார குழுத்தலைவராவார். அவர் யாழ்.மாநகர சபையின் பொறியியலாளர் ஒருவரிடமும் சுமார் 29 லட்சம் ரூபா பணத்தினை பெற்று மீள செலுத்தாது மோசடி செய்துள்ளார் என்றும் அவர் சொன்னார்.
அதேவேளை, இவர் ஒரு சாதாரண நபர். தன்னை ஒரு வர்த்தகர் எனக் கூறிக்கொண்டு, தற்காலிக ஊழியர்களிடம் பணம் வசூலித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்.
இவ்வாறான சம்பவங்களை மறைப்பதற்காகவே இந்தப் போராட்டத்திற்கு தான் தலைமை தாங்கி நடாத்தி வருகின்றார்.
இவர் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் நடந்த கொள்ளைச் சம்பவத்துடன், தொடர்புடையவர் என நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், இவருக்கு எதிராக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது’ என முதல்வர் மேலும் தெரிவித்தார்.
இந்த வழக்கினை வாதாடுவதற்கு சட்டத்தரணிகள் பின்வாங்குவதால் என்னால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியாதுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.