நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் 800 கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்தாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘நாளை மறுதினம் 21ஆம் திகதி இலங்கையின் மூன்று மாகாணங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வடமாகாண சபைத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக எல்லோராலும் பார்க்கப்பட்டு வருகின்றது.
இதுவரை மூன்று மாகாணங்களில் இருந்து 539 வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் கபே அமைப்புக்கு கிடைக்கப்பபெற்றுள்ளன. அதிலும் வடமாகாணத்திலிருந்து மாத்திரம் 87 முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளன. ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்தில் குறைந்தளவு தேர்தல் வன்முறைகளே பதிவாகியுள்ளது.
அத்துடன், யாழ். மாவட்டத்தில் இதுவரை 33 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன. இதில் 25 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறல் தொடர்பாகவும் ஏனைய வன்செயல்கள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் கிடைக்கப்பபெற்றுள்ளதாக’ அவர் தெரிவித்தார்.
‘இந்த தேர்தலில் அரச சொத்துப் பயன்பாடு மற்றும் இராணுவ பிரசன்னம் தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்’ அவர் தெரிவித்தார்.
‘வடமாகாண சபைத் தேர்தல் ஒரு முக்கிய தேர்தலாக எதிர்பார்க்கப்படுவதினால் 800க்கும் மேற்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் ரோந்துக் கண்காணிப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.
தேர்தலில் வாக்களிப்பதற்காக கபே அமைப்பினால் யாழ். மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களில் 131 நடமாடும் அடையாள அட்டை வழங்கும் சேவை மேற்கொள்ளப்பட்டது. இச்சேவையில் 21 ஆயிரத்து 282பேர் விண்ணப்பித்திருந்ததுடன், இவர்களின் 14 ஆயிரத்து 344 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு வீதத்தினை அதிகப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவரும் தமது வாக்குரிமையினை பயன்படுத்த வேண்டும்’ அகமட் மனாப் மேலும் தெரிவித்தார்.