வடமாகாண சபைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமென தான் நம்புவதாக இந்திய முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தெரிவித்தார்.
ரில்கோ சிற்றிக் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சார்க் அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக் குழுவாகிய நாம் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் மக்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டோம். அவர்கள் இந்த தேர்தல் ஜனநாயக முறைபடி நடக்கவேண்டும் என்றே விரும்புகின்றனர். அதன் பிரகாரம் வடமாகாண சபைக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமென நாங்கள் நம்புகின்றோம்.
வடமாகாண சபைத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக சார்க் கண்காணிப்புக் குழு சார்பாக 16 பேர் வருகை தந்துள்ளோம். எங்களில் 7 பேர் யாழ் மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளதுடன், மிகுதிப்பேர் வடமாகாணத்தினை ஏனைய மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
ஏற்கனவே வடமாகாண சபைத் தேர்தலினைக் கண்காணிப்பு பணியில் 2 அமைப்புக்கள் ஈடுபடுகின்றன.
தேர்தல் என்பது மக்களின் வாழ்கையில் ஒரு அத்தியாயம் அதனை மக்கள் சரியாகப் பயன்படுத்தி அனைத்து பொதுமக்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
வாக்கெண்ணும் நிலையம் யாழ். மத்திய கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், இவ்விடயங்கள் தொடர்பாக கட்சி உறுப்பினர்கள் தெளிவு பெற்றால் நன்மையாக இருக்குமென்றும் தான் தெரிவித்ததாக, அது ஒரு சந்தேகம் என்றும், ஊகிப்பு என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
வடமாகாண சபை தேர்தலில் இராணுவ பிரசன்னம் மற்றும் வன்முறைகள் சம்பவங்கள் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இங்கு இருந்த போதும், சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்றும் மேலும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், நீதியான முறையில், அதாவது தவறுகள் எதுவும் நடைபெறாது என்ற நம்பிக்கையில் தேர்தல் திணைக்களமானது, நல்ல படியாக செய்வோம் என்று வெளிநாடுகளில் இருந்து வரவழைத்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரச்சினைகள் அற்ற தேர்தல் என்று எங்கும் நடைபெற்றதில்லை, ஆனால், பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
வடமாகாண சபை தேர்தல் முறையற்ற முறையில் நடந்தால் அதை சொல்லக் கூடிய தென்பு எங்களிடம் இருக்கின்றது என்றும், எங்களின் வரையறைக்குள் இருந்து செயலாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் 23 ஆம் திகதி அவ்விடயங்கள் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்துவோம் என்றும் அவர் மேலும் கூறினார்.