யுத்தத்தை நிறுத்தவும் முயற்சிக்காமல், அழிவுகளைத் தடுக்கவும் முன்வராமல் சுடலைக் குருவிகள் போல் உளறிக் கொண்டு திரிந்தவர்கள் தான் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அவ்வாறானவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தப்போவதாக அறிக்கை விடுக்கின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.
பாசையூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
இருபது வருடங்களுக்கும் மேலாக, மாகாண சபை அதிகாரங்கள் தமிழ் மக்கள் அனுபவிக்கும் வகையில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் என்றும் அவர் கூறினார்.
கூட்டமைப்பு எமது கோரிக்கையை நிராகரித்ததோடு 13 ஆவது திருத்தம் அர்த்தமற்றது. அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிவர்த்திக்க கூடியதாக இல்லை என்றும் மாகாண சபை முறைமையை தொட்டும் பார்க்கப் போவதில்லை என்றும் கூறியவர்கள் இன்று மாகாண சபையின் பதவிகளுக்காக களத்தில் குதித்துள்ளனர்.
ஆயுத அச்சுறுத்தலுக்குப் பயந்து தமது தலைவர்களை மறந்து, மௌனித்த நடைபிணங்களைப் போல் இருந்தவர்கள் அரசியலையும், ஜனநாயகத்தையும் பேசவே அஞ்சி வாழ்ந்தவர்கள் என்பதையும் மறுந்துவிட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
நாம் துணிச்சலோடு 1994 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தீவகங்களிலிருந்து முகம் கொடுத்து ஏற்படுத்திய ஜனநாயக தளத்திலேயே இன்று இவர்கள் எமக்கு எதிராக அவதூறுகளையும், வீராவேசப் பேச்சுக்களையும் பேசுகின்றனர். இந்த ஜனநாயகத்தை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் என்றும் அவர் சுட்டிக் காட்டினர்.
எமது அபிவிருத்திப் பணிகளை, சலுகைகள் என்றும், அடிமைத்தனம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறுகின்றனர். 1998 ஆண்டு நாம் யாழ்ப்பாணத்தின் உள்ளூராட்சி சபைகளைப் பொறுப்பெடுத்து ஆரம்பித்த அபிவிருத்திப் பணிகள்தான் இன்னும் தொடர்கின்றது என்பதனை இம்மாவட்ட மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.
நாம் செப்பணிட்ட வீதிகளிலேயே இன்று இவர்கள் பயணிக்கின்றார்கள். வீடு, உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய தேவைகளைப் எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த போதிலும், சலுகை என்றும் அடிமைத்தனம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விமர்ச்சிக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
யுத்தத்தின் இறுதியில் பலியாகிப் போன எமது உறவுகளுக்காக விழி சிவக்க அழுததும், இரத்தமும் சதையுமாக கட்டிய துணிகளோடு சொல்லொண்ணா துயரங்கள் சுமந்து ஓடி வந்த எமது உறவுகளின் கண்ணீர் துடைக்க எமது கரங்களே நீண்டன. கட்சியின் உதவியும், கொழும்புத் தெருக்களில் கடைகடையாக அலைந்து பெறப்பட்ட உதவிகளையும் சுமந்து வந்து பசி தீர்க்க எம்மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தவர்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடி வந்த உறவுகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், கட்டம் கட்டமாக அந்த மக்கள் தமது சொந்த இடம் திரும்பவும் அரசுடன் வாதாடியும், போராடியும் வந்தவர்கள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் என்பதனை மறந்து விடக் கூடாதென்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இப்போது மீண்டும் ஆயுதம் ஏந்தப்போவதாக அறிக்கை விடுக்கின்றார்கள். தமிழ் மக்களே, நமக்கு இனியும் ஒரு இருண்ட யுகம் வேண்டாம். மாகாண சபை எனும் வாய்ப்பை பயன்படுத்தி அழிந்த நமது தேசத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமே தவிர, மாகாண சபை அதிகாரத்தை செயலிழக்கச் செய்து மீண்டுமொரு துயர யுகத்துக்குள் நாம் சென்று விடக்கூடாது.
இத்தனை காலமாக எதிர்ப்பு அரசியலுக்காக நீங்கள் வழங்கிய ஆதரவு அத்தனையும், அர்த்தமற்றதாகி விட்டது. அந்த அனுபவங்களிலிருந்து கொண்டு மக்களே இந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் எதிர் காலத்தையும் கௌரவமான தீர்வையும் பெற்று வாழ்வதற்காக நீங்கள் ஆதரவு தர வேண்டுமென்றும் வடக்கின் வசந்தத்தை வாழ்வின் வசந்தமாக்க நீங்கள் எல்லோரும் வெற்றிலைச் சின்னத்துக்கு உங்கள் வாக்குகளை வழங்கி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எங்களை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் உங்களை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.