13வது திருத்தச் சட்டம் மூலம் காணி பொலீஸ் அதிகாரம் கிடைக்கப் பெறும் என்றால் அது எந்த கட்சி வெற்றி பெற்றாலும் கிடைக்கப்பெறும். அதாவது நான் வெற்றி பெற்றாலும் கிடைக்கும். எனது கட்சி வெற்றி பெற்றாலும் கிடைக்கும். அல்லது ஏனைய கட்சிகள் வெற்றி பெற்றாலும் கிடைக்கும். ஆனால் நானும் என் கட்சியும் வெற்றி பெற்றால் அவர்கள் கேட்கும் 13வது திருத்தச் சட்டத்துடன் அபிவிருத்தி, வாழ்வாதார மேம்பாடு, சுய தொழில் அபிவிருத்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என எல்லாம் கிடைக்கப்பெறும். என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபைத் தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (16.09.2013) மாலை 3.30 மணியளவில் நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நியாயத்தின் மக்களாக பிறந்தவர்கள் தமிழ் மக்கள் சமுதாயம். இத் தமிழ் சமுதாயம் கடந்த காலங்களில் எமது உரிமைகள் பெற பல்வேறுபட்ட போராட்டங்களை மேற்கொண்டது. அது எமது மக்களின் உணர்வுகளாக அமைந்தது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில் எம் போன்றோர் இன்றும் தலை வணங்குகின்றோம். ஆனால் எம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் இலாபங்களை பெற்றோர் பலர். இது இனியும் தொடர வேண்டுமா? மாற வேண்டும் இதைவேண்டியே மாற்றம் வேண்டி நாம் நிற்கின்றோம்..
எமது மக்களிற்கு இப்போது முக்கிய அடிப்படைத் தேவை, வாழ்வாதார மேம்பாடு மற்றும் சுதந்திர மூச்சுக்காற்று. உரிமை வேண்டும் என்கின்றோம். உரிமை என்பது எனக்கும் உரியதே. ஏனெனில் நானும் தமிழன்தான். என் கொள்கை பிடித்து என் பின்னால் உள்ள இளைஞர் சமுதாயமும்; தமிழ்ச் சமூகம் தான். அதை சாத்தியமான முறையில் பெற வேண்டும். 13வது திருத்தச் சட்டம் மூலம் காணி பொலீஸ் அதிகாரம் கிடைக்கப் பெறும் என்றால் அது எந்த கட்சி வெற்றி பெற்றாலும் கிடைக்கப்பெறும். அதாவது நான் வெற்றி பெற்றாலும் கிடைக்கும். எனது கட்சி வெற்றி பெற்றாலும் கிடைக்கும். அல்லது ஏனைய கட்சிகள் வெற்றி பெற்றாலும் கிடைக்கும். ஆனால் நானும் என் கட்சியும் வெற்றி பெற்றால் அவர்கள் கேட்கும் 13வது திருத்தச் சட்டத்துடன் அபிவிருத்தி, வாழ்வாதார மேம்பாடு, சுய தொழில் அபிவிருத்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என எல்லாம் கிடைக்கப்பெறும். ஆனால் இது ஏனைய கட்சிகளால் சாத்தியமா? யோசியுங்கள்.
இந்த உலகத்திலேயே இலவசமாக கிடைக்க கூடியது இரண்டு விடயம். அவை சுகாதரம், கல்வி ஆகியவையே. ஆனால் இன்றைக்கு நம் பகுதிகளில் ஆகக்கூடிய விலையில் விற்றப்படுகின்ற விடயங்கள் இந்த கல்வியும், சுகாதாரமுமேயாகும். இதனை மாற்றியமைக்க வேண்டும். அடிப்படை தேவைகளுக்கு பணத்தினால் தலையங்கம் இடப்படுவது மாற்றப்பட வேண்டும். இவை எல்லாவற்றையும் மாற்றியமைத்து தமிழர்கள் தமது பகுதிகளில் மிக சுதந்திரமாக செல்வதற்கு யாருக்கு வாக்களிக்க வேண்டுமென நீங்கள் சிந்தியுங்கள் மீண்டும் எம்மை உணர்ச்சி வசப்படுத்தி எம் உணர்வுகளை தூண்டிவிடும் அரசியலை ஒதுக்க வேண்டும். 60 ஆண்டுகள் கழிந்து விட்டது. அதே பேச்சு அதே செயல் 60 ஆண்டுகளாக அதே பேச்சு. சிங்களப் பேரினவாதத்தை நான் அங்கீகரிக்கவில்லை. அதே போல் சில தமிழ் அரசியல் வாதிகளையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
கரை வேட்டி அரசியல், போராட்ட அரசியல் இவை இரண்டும் தோற்றுப் போக இப்பொழுது மீண்டும் கரைவேட்டி அரசியலில் சிலர் நுழைந்துள்ளானர். இவை எல்லாம் கடந்த காலங்களில் பிரயோசனமற்றுப் போனவை. எதையுமே எம்மக்களுக்கு பெற்றுத்தராத அரசியல் வடிவங்கள். கடந்த கால வாழ்வில் தமிழ் மக்கள் முயற்சிக்காத அரசியல் ஓன்று இருக்கின்றது. அதுதான் நிம்மதியான வாழ்வுக்கான இணைந்த அரசியல். அதற்காக நாம் ஆயுதப் போரட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம் இல்லை. அதை நான் வரவேற்கின்றேன். ஆனால் அத்தகைய எம் உறவுகளின் போராட்டம் வீணாகிப் போய் விட்டது. இந்த வீணாக்கற்படுத்தலில் சில உணர்ச்சி வசப்படுத்தும் அரசியல் தலைமைகளின் பங்களிப்பும் இருந்திருப்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
எம் வாழ்க்கை போரட்டங்களுக்காக 60 வருடங்கள் தொலைந்து போய் விட்டன. வெற்றியடையும் பொருட்டு தோல்விக்காக காத்திருந்த சமுதாயமாக எம் சமுதாயம் மாறி விட்டது.
இப்போது மீண்டும் அத்தகைய போராட்டங்களை நாம் உருவாக்க வேண்டுமா. இல்லை போராளியாக இருந்தவன் கால்கள் துண்டிக்கப்பட்டு இன்று கச்சான் வியாபாரியாக மாறி இருக்கின்ற சூழ்நிலை இனியும் எம் இளைஞர்களுக்கு வேண்டாம்.
இந்த யுத்தத்தை துண்டும் அரசியலும் எமக்கு வேண்டாம். எமக்கு வேண்டியது நிம்மதியான வாழ்வு, அமைதியான இரவு நேர உறக்கம். இனியும் ஆயுதம் ஏந்தி போராட எம்மக்களால் இயலாது.
எனவே அன்புக்குரிய உறவுகளே எமக்கு இன்னுமொரு புதிய முயற்சி தேவைப்படுகின்றது. அந்த முயற்சியில் எமது இளம் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புக்கள் நியாயமான முறையில் கிடைக்கும். யுத்தக் காற்று இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை எமது எதிர்கால சந்ததிக்கு சுவாசிப்பதற்காவும் வாழ்வதற்காகவும் வழங்க முடியும். நம் எதிர்காலம் நம் கைகளில்தான் தற்சமயம் உள்ளது.
மக்களே, எம்மை நாமே ஆள்வதற்கு கிடைக்கவுள்ள இந்த சந்தர்ப்பத்தை அமைதிக்கான ஆட்சியாக மாற்ற வேண்டுமா? எமது எதிர்கால சந்ததியின் சுபீட்சத்திற்கான ஆட்சியாக மாற்ற வேண்டுமா? அல்லது மாறாக, மீண்டும் இழப்புக்களையும், வேதனைகளையும், கண்ணீர்களையும், மரண ஓலங்களையும் தரும் அரசியலாக மாற்ற வேண்டுமா? என்று சிந்தியுங்கள்.
இது உங்கள் தருணம். உங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில். உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் வாழ்வு உங்கள் முடிவுகளில் உள்ளது. எனவே பொறுப்புள்ள சமூகமாக, சிந்தித்து எதிர்வரும் 21ம் திகதி அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று உங்கள் முதல் அரசியல் உரிமையை பயன்படுத்துங்கள். அதுவே உங்கள் எதிர்கால சந்ததிக்கு நீங்கள் செய்யவுள்ள பெறுமதியான கடமையாகும். என்றார்.