எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலை நிறுத்தும்படி கேட்டு விசேட விண்ணப்பமொன்று நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர இதை தாக்கல் செய்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதும் நோக்கம் இலங்கையின் ஆள்புலத்தில் ஒரு தனிநாடு அமைப்பதென நீதிமன்றம் வெளிப்படுத்த வேண்டும் என விண்ணப்பதாரர் கேட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய ஆகியோரை இந்த வழக்கின் பிரதிவாதிகளாக இவர் காட்டியுள்ளார்.
இறைமை மக்களிடமே உள்ளது எனவும் தமிழ் மக்களை ஆளும் உரிமை கொழும்பிலுள்ள அரசாங்கத்திடமில்லை எனவும் அந்த உரிமை தமிழ் மக்களிடத்திலேயே உள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.
ஒற்றையாட்சி அமைப்பிலிருந்து அல்லது அரசின் பிரிக்க முடியாத இறைமையிலிருந்து விலகி செல்தல் அரசியலமைப்பின் உறுப்புரை 157ஐ மீறுவதாகவும் தனிநாடு ஒன்றை உருவாக்கும் நோக்கில் செயற்படுவதாகவும் எடுக்கப்பட வேண்டும் என அவர் கோருகின்றார்.