தம்பி பிரபாகரன் கேட்டதையே தமிழ்தேசிய கூட்டமைப்பும் கேட்பதாக சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் வெட்கத்திற்குரியது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சட்டம் படித்ததாக கூறிக்கொள்ளும் ஒருவருக்கு தனிநாட்டு கோரிக்கைக்கும், சமஷ்டிக்கும் வித்தியாசம் தெரியாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் சீ.வி.விக்கினேஸ்வரன்.
யாழ்.நாவாந்துறை முத்தமிழ் கலையரங்க அரங்கில் நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக யாழ்.மாவட்டத்தில் வீரம் செறிந்த நாவாந்துறை மண்ணில் வந்து மறவர்கள் முன்னிலையில் உரையாற்ற கிடைத்த சந்தர்ப்பத்திற்கு மனம் மகிழ்வதாக தெரிவித்த சீ.வி.விக்கினேஷ்வரன்,
தொடர்ந்து உரையாற்றுகையில்,
தம்பி பிரபாகரன் கேட்டது தனிநாடு. ஆனால் கூட்டமைப்பு கேட்பது ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு. அதனை புரிந்து கொள்ளாமல் ஜனாதிபதி பேசுகின்றாரா அல்லது உள்நோக்கோடு பேசுகிறாரா என நாம் சந்தேகிக்கின்றோம்.
அவர் உள்நோக்கோடு பேசியிருந்தால் அவருடைய நிலைப்பாடு புலிகளை எவ்வாறு சிங்கள மக்களிடமும், சர்வதேசத்திடம் பயங்கரவாதிகளாக சித்தரித்தார்களோ அவ்வாறே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினையும் சித்தரித்து எமக்கும் முடிவுகட்ட நினைக்கிறார்கள் என்றே நாங்கள் கருதுகின்றோம்.
உண்மையில் 1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது தமிழ் மக்களையும் சிங்கள அரசாங்கம் கருத்தில் கொண்டிருந்தால் நாங்கள் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம். ஆனால் சர்வதேசத்திற்கும், எமது மக்களுக்கும் உண்மைகள் தெரியும் என்றார்.
மேற்படி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, மற்றும் வேட்பாளர்கள் ஐங்கர நேசன், அனந்தி, சயந்தன், கஜதீபன், விந்தன், ஆனோல்ட், சிவஞானம், சிவாஜிலிங்கம், சிவயோகம், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.