தமிழ் மக்கள் சிங்களவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கு அரசியல் அதிகாரம் உட்பட எந்த அதிகாரமும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் மகிந்த அரசு உறுதியாக உள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றையும் அவர்கள் முன்னெடுக்கின்றனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு எதிரான அந்த நிகழ்ச்சி நிரலை முறியடிக்க வேண்டுமென்றாரல் அதனை முறியடிக்கும் வகையில் நாங்கள் ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். அதற்கான எமது செயற்றிட்டத்தின் ஆரம்பமாகவே வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகிறது எனவும் அவர் கூறினார்.
வடக்கிற்கு தேர்தலை நடத்த அரசாங்கம் விரும்பவில்லை. சர்வதேச அழுத்தம் காரணமாக தேர்தலை நடத்துகிறது.
எனினும் தமிழர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும். அவர்கள் ஆட்சி செய்யக்கூடாது என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலை வகுத்து செயற்படுகின்றனர்.
வடக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை திட்டமிட்டு சீர்குலைப்பதற்காகவே சிங்களவர்கள் அழைத்துவரப்பட்டு திட்டமிட்டு குடியேற்றப்படுகின்றனர். எங்களது நிலம் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது.
அரசின் திட்டமிட்ட தமிழ்ர்களுக்கு எதிராக செயற்பாடுகளை முறியடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை தேவை. இந்த அரசு வென்றுவிட்டால் தமிழ் மக்களுக்கு எதிராக தமிழர்களே ஆணை வழங்கியதாக ஆகும்.
தமிழ் மக்கள் சுயமரியாதையுடன், உரிமைகளுடன் தம்மைத் தாமே ஆளவேண்டுமெனில் கூட்டமைப்பு வென்றாக வேண்டும். அதுவும் மிகப்பெரும்பாண்மையாக வெல்ல வேண்டும் எனவும் சுரேஷ் எம்.பி. மேலும் தெரிவித்தார்.