அரசாங்கத்தின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வட மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஈடுபடுவதை நிறுத்துமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனினால் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரதியொன்று வட மாகாண உதவி தேர்தல் ஆணையாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கடந்த செப்டெம்பர் 8ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தார் என்பது தொடர்பில் ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளதை உங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
மிக உயர் பதவியான ஆளுநர் பதவி வகிக்கும் அதிகாரிக்கு உகந்த செயற்பாடாக இது இல்லாதது மட்டுமல்லாமல் தனது பதவியையும் தவறாக அவர் பயன்படுத்தியுள்ளார்.
இது சட்டத்துக்கு மாறானது மட்டுமன்றி ஒழுக்கக் கேடானதும் கூட. ஆளுநரின் இவ்வாறான நடத்தைகளை நாம் மிகுந்த வேதனையுடன் கவனித்து வந்துள்ளோம்.
அதுமட்டுமல்ல மாகாண சபையில் பணிபுரியும் பொது சேவையாளர்களுக்கு இடர் கடன்களை வழங்கும் அளவுக்குச் சென்று அவர்களை சிறுமைப்படுத்தியுள்ளார்.
இது அவர்களின் தனிப்பட்ட விடயம் மட்டுமின்றி அவர்களின் உரிமையும் கூட. ஒரு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது தேர்தலில் அரசாங்க கட்சிக்கு ஆதரவளிக்கும் படியும் அவர் கோரியுள்ளார். இது பொது சேவைத்துறைக்கு ஓர் அபகீர்த்தியாகும்’ என்றார்.