வட மாகாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிந்தனைகள் நடைமுறையில் இல்லை. இங்கு மஹிந்த ஹந்துருசிங்கவின் சிந்தனையே வழக்கில் இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதிலிருந்து இராணுவத்தை வரம்புமீற இடமளித்தால் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் பாரிய விளைவுகள் ஏற்படும் என்று சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பாரதி சனசமூக நிலையத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
நான் சில நாட்களாகவே இராணுவம் வடமாகாணத் தேர்தலில் தலையிடுகின்றது என்று கூறி வந்தேன். அதற்கு ஒரு நல்ல உதாரணம் இன்று கிடைத்துள்ளது.
இன்றைய ஞாயிறு தினகரனில் செய்தி வாசித்தேன். அதில் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க மனோ கணேசனையும் என்னையும் பற்றி தினகரன் வார மஞ்சரிக்கு அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருபவர்கள் இராணுவத்தின் மீது வீண் பழி சுமத்துவதை வன்மையாக அவர் கண்டிப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.
அத்துடன் நான் கொழும்பு அரசியல் கண்ணாடி மூலம் வடக்கைப் பார்ப்பதாகவும் எனது கருத்துக்கள் என்பது கடந்த கால உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கள் தொடர்பில் ஆச்சரியப்பட வைக்கின்றது என்றும் கூறியுள்ளார்.
யார் இந்த ஹத்துருசிங்க, அவர் அரசாங்கத்தின் சேவகர் கை கட்டி, வாய் புதைத்து ஏவல் புரியும் ஒரு அரசாங்க சேவகர். அவருக்கு என்ன உரித்திருக்கிறது,மனோகணேசனையும் என்னையும் விமர்சிப்பதற்கு. அவருக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் யாராவது சொன்னால் அவர் தமது மேலிடத்திற்கு சொல்லி அவர் வேலை செய்யும் திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சரே எங்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.
அரச சேவகரான அவருக்கு அவரின் எஜமானரின் உரித்தை யார் வழங்கினார்கள்? இப்படிப்பட்ட வரம்பு மீறிய செயல்களினால்தான் வட இலங்கை தமிழ் மக்கள் இராணுவத்தை வெளியேறச் சொல்கின்றார்கள்.
மேலும் வட மாகாண சபைத் தேர்தலில் அவரின் கைப்பொம்மைகள் நான்கு பேர் போட்டியிடாவிட்டால் அங்கஜனைக் குறிவைத்து எப்படி அவர்களால் தாக்க முடிந்தது. அங்கஜனும் அரச தரப்பு வேட்பாளர். அப்படியிருந்தும் இராணுவம் பக்க பலமாக இருக்கின்றது என்ற மமதை அல்லவா அவர்களை அவ்வாறு செய்யவைத்தது.
எனவே வட மாகாணத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் சிந்தனைகள் நடைமுறையில் இல்லை என்றும் மஹிந்த ஹத்துருசிங்கவின் சிந்தனை வழக்கில் இருக்கின்றது என்பது இதிலிருந்து தெரிகிறது.
என்னவாக இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷ எம் நாட்டின் ஜனாதிபதி அதுவும் முப்படைகளினதும் அதிபர். அவரை மீறி அவரின் சேவகன் வாயைத் திறப்பது முழு இலங்கைக்கும் ஒரு இழுக்காகப்படுகின்றது.
அவர் இனிமேலும் பொது மக்களை விமர்சிப்பதை நிறுத்துவாராக, ஆயுதம் ஏந்தினால் எவரையும் எதையும் தான் தோன்றித்தனமாக குறை கூறலாம். எவரையும் பயப்படுத்தி வைக்கலாம் என்று இந்த அரச சேவகர் நினைக்கக்கூடாது.
இதிலிருந்து நாங்கள் ஒரு பாடத்தைப் படிக்கின்றோம். இராணுவமானது கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட வேண்டும். வரம்பு மீற இடமளித்தல் ஆகாது. அவ்வாறு வரம்பு மீறி விட்டால் அரசாங்கத்திற்கும் நாட்டுக்கும் பாரிய விளைவுகளை அது ஏற்படுத்தும்.
இதை வலியுறுத்திப் பேசுவதற்காகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உங்களிடம் 36 ஆசனங்களில் 30 ஆசன வெற்றியைக் கேட்கிறது. உண்மையான ஒரு விசாரணை நடைபெற்றால் வட மாகாணத்தில் எந்த அளவுக்கு இராணுவம் மக்கள் இயல்பு வாழ்க்கையை பாழ்படுத்தி வருகின்றது என்பது தெரிய வரும்.
18 ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னர் முறையான ஒரு விசாரணையை எதிர்பார்க்க முடியாத நிலையில் நாங்கள் வடமாகாணத்தில் இராணுவம் ஆற்றிய ஆற்றிக்கொண்டிருக்கும் அட்டூழியங்கள் பற்றி சர்வதேச விசாரணை ஒன்றைக் கேட்க வேண்டியிருக்கும்.
அதற்குக் கூட எமக்குப் பலம் இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் தரும் 2/3 பங்கு பெரும்பான்மை வாக்குகளை விடவும். நாங்கள் பெரும்பான்மை வாக்குகளைக் கேட்கின்றோம். கிடைத்து விட்டால் என்ன நடக்குமோ என்ற நிலையில் தான் இராணுவத்தினர் பலவிதங்களில் அரச வெற்றிக்காகப் பாடுபடுகின்றனர்.