எந்த இலட்சியத்துக்காக எந்த அரசியல் அபிலாஷைக்காக நாங்கள் இலட்சக்கணக்கான மக்களைப் பறி கொடுத்தமோ அதனைச்சர்வதேச ஆதரவுடன் அடைந்தே தீருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
சுன்னாகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரி வித்ததாவது:
எங்கள் மக்கள் சார்பான தீர்வுத் திட்டத்தை நாங்கள் இந்த அரசிடம் முன் வைத்தோம். இந்த அரசு பேச்சு என்ற பெயரில் காலம் கடத்தியதே தவிர எங்களுக்குப் பதில் தரவில்லை.
இதன் பின்னர் அவர்கள் உருவாக்கிய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நாம் பங்கெடுக்கவில்லை. இதற்காக எம்மை யாரும் தெரிவுக் குழுவுக்குப் போகச் சொல்லித் திணிக்கவில்லை. மாறாக அமெரிக்காவும், இந்தியாவும் எங்களின் இந்த முடிவை வரவேற்றன.
சர்வதேசம் எங்கள் பக்கம் நிற்கின்றது. நவநீதம்பிள்ளை இலங்கைப் பயணத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில் அரசை விமர்சித்திருக்கிறார். ஆழமாகப் பார்த்தால் வேறு சில தரப்புகளையும் விமர்சிக்கிறார்.
நாங்கள் பக்குவப்பட வேண்டும். நாங்கள் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன்போது தான் சர்வதேசம் எங்கள் பக்கம் நிற்கும்.
எந்த இலட்சியத்துக்காகவும் அரசியல் அபிலாஷைகளுக்காவும் இத்தனை லட்சம் மக்களைப் பறிகொடுத்தோமோ அந்த இலட்சியத்தை சர்வதேச ஆதரவுடன் அடைந்தே தீருவோம் என்றார்.