ஓமந்தை இராணுவ சோதனையில் சகல சோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார்.
இந்த சோதனை சாவடியில் நேற்று சனிக்கிழமையிலிருந்தே சகல சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இந்த சோதனை சாவடி பிரதானமாக செயற்பட்டது.
வடக்கில் இருந்த தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் செல்வோர் இந்த சோதனை சாவடியில் இறக்கப்பட்டு அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வவுனியா, ஓமந்தை இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்களின் பதிவு மட்டும் இடம்பெறும் எனவும் போக்குவரத்து பயணிகளை வாகனங்களில் இருந்து இறக்கி சோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களும் சோதனை நடவடிக்கைகளுக்காக இறக்கி ஏற்றப்படாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை சோதனைச்சாவடியானது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் உறுதுணையாக காணப்பட்டதாக தெரிவித்ததுடன் இதனூடாக தினமும் சராசரியாக 320 பேரூந்துகளும் 575 பார ஊர்திகளும் 630 சிறிய ரக வாகனங்களும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்று வந்தன.
தினமும் சராசரியாக 15 ஆயிரத்து 377 உள்ளூர் பயணிகளும் 198 வெளிநாட்டு பயணிகளும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்றுவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கில் இருந்து தெற்கிற்கு 254 பேரூந்துகளும் 710 பார ஊர்திகளும் 773 சிறிய ரக வாகனங்களும் தினமும் சென்று வந்தன.
அத்துடன், தினமும் சராசரியாக 17 ஆயிரத்து 164 உள்ளூர் பயணிகளும் 111 வெளிநாட்டு பயணிகளும் தெற்கிற்கு செல்வதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், யுத்தக்காலத்தின் போது ரிமோட் கொன்றோல்கள், வயர்கள், தொலை நோக்கிகள், திசை காட்டிகள், சிறிய ரக பற்றரிகள், இராணுவ பயன்பாட்டுக்கான பொருட்களை கொண்டு செல்வதை கட்டுப்படுத்துவதற்காக இந்த சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் 15 வருடங்களாக செயற்பட்டு வந்த இச் சோதனைச்சாவடியில் சகல சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன என்றார்.
தொடர்புடைய செய்தி