சர்வானந்தன் கைது செய்யப்படாமையானது எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ளது என வட மாகாண சபைத் தேர்தலின் ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் வேட்பாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின், யாழ் மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் சாவகச்சேரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
கடந்த 27.08.2013 செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் சாவகச்சேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் என் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதை தடுக்க வந்த எனது பொலீஸ் மெய்ப் பாதுகாவலர் திஸாநாயக்க துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தற்பொழுது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவம் தொடர்பில் எம்மால் யாழ் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் பொலீஸாரால் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இச் சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டது குமாரு சர்வானந்தன் என்பவரே என உறுதிப்படுத்தி பொலீஸில் பலர் சாட்சியமளித்துள்ளனர். இருந்த போதிலும் குறித்த நபர் குமாரு சர்வானந்தன் என்பவரை பொலீஸார் கைது செய்யமால் ஒரு பக்க சார்பாக எம் தரப்பு மீது மட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பொலீஸாரின் இவ்வாறான நடவடிக்கையானது கண்டனத்திற்குரிய விடயமாகும்.
மேலும் இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளேன். எனவே இச் சம்பவத்துடன் தொடர்புடைய சர்வானந்தன் கைது செய்யப்படாமையானது எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஆகவே உடனடியாக இச் சம்பவத்துடன் தொடர்புடைய சர்வானந்தனை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொலீஸாரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன்.
இச் சம்பவத்தின் ஊடாக என் மீதும், எமது வெற்றியின் மீதும் சேற்றை வீசி மக்களிடமிருந்து என்னை பிரிக்க முற்படுகின்றனர். எனவே இது தொடர்பில் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் உண்மையை தெரிவிப்பதற்கான விரிவான ஊடாக சந்திப்பொன்றை மிக விரைவில் ஏற்பாடு செய்யவுள்ளேன் என்பதையும் அறியத் தருகின்றேன்.
இவ்வாறு அவ் அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்