நாட்டில் நிலைகொண்டிருந்த பயங்கரவாதிகளின் அபிலாஷைகளை நிறைவேற்ற சில அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்’ என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் இராணுவ பயன்பாட்டில் இருந்த வீடுகள் சிலவற்றைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய கட்டளைத் தளபதி, ‘நீண்ட காலமாக இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த இந்த காணிகளை வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 1999ஆம் ஆண்டு இந்த பகுதியில் நான் கடமையாற்றியிருக்கின்றேன். இந்த காணி இராணுவப் பயிற்சி முகாமாக இருந்தது.
யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து வடக்கில் இராணுவ காவலரண்கள், சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டு மக்களின் சுதந்திரமாக வாழ்வுக்கு வழிசமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.
‘மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் நடைபெற இடமளிக்கக் கூடாது. யுத்தத்தின் தாக்கத்தை நாம் எல்லோரும் உணர்ந்திருக்கின்றோம். ஆனால் சிலர் பயங்கரவாத அபிலாஷைகளை மக்களின் அபிலாஷைகள் என மாற்ற விரும்புகின்றனர்.
இந்த நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எந்தவொரு பேதமுமின்றி அனைவரும் ஒன்றுபட்டு பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க வேண்டும்’ என்றார்.
‘தொடர்ச்சியாக இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த காணிகள், வீடுகளை உரிமையாளர்களிடம் கையளித்து வருகின்றோம். இன்னும் இரண்டு வாரத்தில் 52ஆவது படையணியின் தலைமையகம் அமைந்துள்ள தனியார் காணியும் மந்துவிலில் அமைந்துள்ள 523ஆவது படைப்பிரிவு தலைமையகமும் அங்கிருந்து அகற்றப்படும்’ என்று மஹிந்த ஹத்துருசிங்க மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
தென்மராட்சியில் படையினர் பயன்பாட்டிலிருந்த காணிகள் மற்றும் வீடுகள் மக்களிடம் கையளிப்பு