‘இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டுமே தவிர மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது’ என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்றய தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“யுத்தம் நடைபெற்ற காலத்தில் முள்ளிவாய்கால் பகுதியில் எமது மக்கள் துன்பப்படும்போது அவர்களை நவநீதம்பிள்ளையோ சர்வதேச நாடுகளோ பாதுகாக்கவில்லை. எமது இராணுவத்தினரே இங்கிருந்து மக்களை மீட்டு அவர்களை பாதுகாத்தனர்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டுமே தவிர மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேச நாடுகளோ ஐ.நாவோ உரிய தீர்வினை பெற்றுத்தரப் போவதில்லை. எமது பிரச்சினைக்கு நாமே தீர்வு காணமுடியும்.
தென்னிலங்கை போன்று வடபகுதியிலும் உயர்பாதுகாப்பு வலயங்கள் இருக்க முடியாது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக தென்னிலங்கையில் எவ்வாறு பாதுகாப்பு வலயங்கள் இருக்கிறதோ அதேபோன்று வடக்கிலும் பாதுகாப்பு வலயங்கள் இருப்பதை தவிர்க்கமுடியாது.
பொதுமக்களின் வீடுகள் மற்றும் காணிகள் அவர்களுக்கே உரியது. அந்தவகையில், படையினர் வசமுள்ள பொதுமக்களின்
வீடுகள், காணிகள் மீளவும் பொதுமக்களிடம் படிப்படியாக கையளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இவ்வாறான செயற்திட்டங்கள் இணக்க அரசியல் ஊடாகவே சாத்தியமாகும். இதைவிடுத்து எதிர்ப்பு அரசியலால் அழிவைத்தான் பெற்றுக்கொள்ள முடியுமே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வினை ஒருபோதும் காணமுடியாது. அரசாங்கத்துடன் இணைத்து செயற்படுவதன் மூலம் எமது பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும்.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக 2010ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்களின் வீடுகள் மற்றும் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச நாடுகளோ, ஐ.நா பிரதிநிதிகளோ எமது பிரச்சினைக்கு ஒருபோதும் உரிய தீர்வினை பெற்றுத்தர முடியாது என்பதுடன், ஐ.நா பிரதிநிதியான நவநீதம்பிள்ளை இங்கு வருகை தரவுள்ளார். இவர் இங்கு வந்து இங்குள்ள நிலமைகளை பார்வையிடவேண்டும்.
மக்கள் சந்தர்ப்பங்களை தவறாகப் பயன்படுத்தி விட்டார்கள். இனிவரும் சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தும் பட்சத்தில் எமது பகுதிகள் மென்மேலும் அபிவிருத்தியிலும் மேம்பாட்டிலும் முன்னேற்றம் காணமுடியுமென்றும்’ அவர் தெரிவித்தார்.