தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்திக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்தில் முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மற்றும் சமூகத்துடன் இணைக்கப்பட்ட போராளிகளின் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு சந்தோசமாக நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் நாங்கள் அச்சுறுத்தப்படுகின்றோம்.விசாரணைக்குட்படுத்தப்படுகிறோம் என்று சொல்லி அரசியல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இவ்வாறான அரசியல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது என்று கூட்டமைப்புக்கு எதிராக ‘ எமக்கு உதவுவதாக கூறி வெளிநாடுகளில் வாங்கும் பல மில்லியன் ரூபா பணம் எங்கே கூட்டமைப்பே கூறு’ ‘ ஆனந்தி நீ எங்களுக்காக செய்தது ஏதாவது உண்டா’ ‘ குறுகிய அரசியல் நோக்கத்திற்காக முன்னாள் போராளிகளை காட்டிக்கொடுக்காதே’ என பல்வேறு கோசங்களைக் தாங்கியவாறு 200 க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் கலந்துகொண்டனர்.