யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் இன்று (நேற்று) கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தல், அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் எவர் ஈடுபட்டாலும் அது கடுமையான கண்டனத்துக்குரியதாகும். சுதந்திரமாகவும், ஜனநாயக மரபுகளோடும் தேர்தல் நடக்க வேண்டுமென்பதையே ஈ.பி.டி.பி விரும்புகின்றது.
வடக்கு மாகாணத்தில் இதுவரை தேர்தல் முறைகேடுகள், வன்முறைகள் என்பன குறிப்பிடும் அளவில் பதிவு செய்யப்படவில்லை என்று கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்திருக்கும் நிலையில், இன்று (நேற்று) நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கதாகும்.
அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கி வடமாகாண சபை தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதே எமது கட்சியினது விருப்பாகும் என்றும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வேட்பாளரான தம்பிராசா தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஐ.ம.சு.மு முதன்மை வேட்பாளர் சி. தவராசா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வேட்பாளரான தம்பிராசா தாக்கப்பட்ட சம்பவத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளரான சின்னத்துரை தவராசா அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இன்றைய (நேற்றய) தினம் யாழ்.மின்சார நிலைய வீதியில் கூட்டமைப்பினர் வேட்பாளரான தம்பிராசா தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடமாகாண சபைத் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெற அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானது என்றும், மேலும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் எங்கும், யாருக்கு எதிராகவும் நடைபெறக் கூடாது. தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடும் அனைவரும் சுதந்திரமாகவும், பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமலும் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.