வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி வாகை சூடும். இதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமேயில்லை. அரசு தற்போது வெளியிடும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று தெரிவித்தார்.
“வடமாகாணசபையைக்கைப் பற்றுவது அரசா, கூட்டமைப்பா என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக ஐந்து தேர்தல் தொகுதிகள் திகழ்கின்றன. 14 தேர்தல் தொகுதிகளில் ஐந்தில் கூட்டமைப்புக்கும், நான்கில் அரசுக்கும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும நேற்றுத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சம்பந்தன் எம்.பியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் மாபெரும் வெற்றியை வடக்கு மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். இந்நிலையில் அரச அமைச்சர்கள் வெளியிடும் முட்டாள்தனமான – பொய்யான கருத்துகளுக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. மக்களே இதற்கான பதிலை தேர்தலில் வழங்குவார்கள். அரசானது தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அதை விடுத்து, ஆளுக்கு ஆள் மாறி மாறி கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்த்தல் வேண்டும்” – என்றார்.