கிளிநொச்சியில் இருந்து யாழ்.மாவட்டத்திற்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் லக்சபான மின்சார விநியோகம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கிளிநொச்சியில் உள்ள லக்சபான உப மின் நிலையத்தில் இருந்து சுன்னாகம் வரையில் நிர்மாணிக்கப்பட்ட 1,32,000 வோல்ட் அதியுயர் அழுத்த மின்மார்க்கத்தினூடாக மின்சார இணைப்பு வேலைகள் யாவும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இந்த மின்விநியோகம் திட்டம் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
முதல் ஒரு மாத காலத்திற்கு இந்த லக்சபான மின்விநியோகம் பரீட்சார்த்த சேவையாக நடைபெறவுள்ளதாகவும் பின்னர் யாழ் மாவட்டத்தில் சீரான மின்விநியோகம் வழங்கப்படும் என்று மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாளை வெள்ளிக்கிழமை ஊரெழு, நீர்வேலி, போயிட்டி, அச்செழு, சிறுப்பிட்டி, புத்தூர் கிழக்கு, மட்டுவில், சரசாலை, மந்துவில், வரணி, கொடிகாமம், எருவன், மிருசுவில், சோரன்பற்று, கோவில்வயல், .இயக்கச்சி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் 132,000 வோல்ட் அதியுயர் அழுத்த மின்மார்க்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி மின்சார சபை பொதுமக்களை கேட்டுள்ளது