வியட்னாம் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடல் சார் தொழில்களை வளர்ச்சி அடையச்செய்யும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான வியட்னாம் நாட்டின் தூதுவர் ரொன்சின்தான் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வியட்னாம் நாட்டின் தூதுவர் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் அலுவலர்களான என்.நிருபராஜ் மற்றும் எஸ்.சஜிவனும் கலந்துகொண்டனர்.
முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் வேலனை துறையூரிலும் கிளிநொச்சியில் கிரான்சி மற்றும் வலைப்பாட்டிலும் இந்த முன்னோடி செயல் திட்டம் மேற்க்கொள்ளப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கடற்பாசி வளர்த்தல் சிங்க இறால் வளர்த்தல் மற்றும் கடலட்டை வளர்தல் அபிவிருத்தி செய்தல் போன்ற செயல்பாடுகள் மேற்க்கொள்ளப்படவுள்ளன.
ஏனைய நாடுகளுக்கு இத்தகைய தொழில்நுட்ப அறிவை வழங்குவதாக இருந்தால் பல லட்சக் கணக்கான ரூபாக்கள் செலவு செய்யப்பட்டே இத்தகைய தொழில்நுட்பத்தைப் பெற முடியும்.இலங்கைக்கு இந்த தொழில் நுட்பமானது இலவசமான முறையில் வழங்கப்படுகின்றது. இலங்கை நாட்டின் ஜனாதிபதியும் வியட்நாம் நாட்டின் ஜனாதிபதியும் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாகவே இதனை மேற்க்கொள்கின்றோம் என வியட்னாம் நாட்டின் தூதுவர் தெரிவித்தார்.