யாழ்ப்பாணத்தில் காசோலை மோசடி அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது காசோலை மோசடி தொடர்பிலேயே அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெவ்ரி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து எடுக்கப்படுகின்ற காசோலைகள் இலங்கையின் எந்தப் பாகத்திலும் மாற்றக்கூடிய நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாற்றமடைந்து யாழ்ப்பாணத்தில் வழங்கப்படுகின்ற காசோலைகளை யாழ்ப்பாணத்திலோ அல்லது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலேயோ மாற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
முன்னர் தனியார் துறையினரால் வழங்கப்படுகின்ற காசோலைகளாக இருந்தாலும் இலங்கையின் எப்பாகத்திலும் மாற்றிக் கொள்ள முடியும். அவ்வாறானதொரு நம்பிக்கை காணப்பட்டது. ஆனாலும் இன்று காசோலையினை வாங்கவே பயப்படுகின்றனர்.
தற்போது காசோலையினைக் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் மிகவும் மோசமான முறையிலேயே நடந்து கொள்கின்றனர். நம்பிக்கையற்ற ஒரு நிலை காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் காசோலை விடயத்தில் மிகவும் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
இதேவேளை, மீற்றர் வட்டிக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு அதனை மீள வழங்க முடியாத நிலையிலேயே அதிகமான தற்கொலைகள் இன்று யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.
அதன்படி வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது வட்டிக்குப் பணத்தினை பெற்றுக் கொள்பவர்கள் அதனை மீளச் செலுத்த முடியாத வேளையிலும் அதேபோல வட்டிக்குப் பணத்தைப் பெற்று வேறு ஒருவருக்கு வழங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மீள செலுத்தாத சந்தர்ப்பங்களில் விரக்தியடைந்தும் தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் அரச வங்கிகளில் கடன்களைப் பெற்றுக் கொள்ளுவதன் ஊடாக பல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டுக் கொள்ள முடியும் எனவும் எஸ்.எஸ்.பி மேலும் தெரிவித்தார்.