வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுவில் நிராகரிக்கப்பட்டவர்கள் அந்த மாகாணத்திலேயே சுயேட்சை குழுவாக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது இரசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சார்பில் இத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருந்த நிலையில், இறுதி நேரத்தில் கூட்டமைப்பினால் கைவிடப்பட்டவர்களே இவ்வாறு களமிறங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானவர்கள் தனித்து களமிறங்குவதற்கு எடுக்கும் தீர்மானத்திற்கு அரசியல் கட்சி ஒன்று மறைமுகமாக ஆதரவினையும் வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று இத் தேர்தலில் சுதந்திரக்கட்சியில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்களும் இத் தேர்தலில் சுயேட்சைக்குழுவாக அரசாங்கத்திற்கு ஆதரவாக போட்டியிடவுள்ளதாகவும் தங்களுடைய வேட்பு மனுவை அவர்கள் இன்று தாக்கல் செய்யவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது இவ்வாறு இருக்க நேற்றய தினம் அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் நிர்வாகிகளைச் சந்தித்த ஜனாதிபதி “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் அடிக்கடி என்னை வந்து சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு வேட்புமனுக்கூடத் தேவையில்லை. ஆனால் மக்களுக்கான உங்கள் பணியுடன் சேர்ந்து இயங்கத் தயாராக இருக்கின்றோம் என அவர்கள் கூறுகின்றனர். எங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அவர்கள் உறுதியளித்துள்ளனர்” என்று ஜனாதிபதி கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.