“அரசுடன் இணக்க அரசியல் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனே பொருத்தமானவர். ஏனெனில் அவர் எமது அமைச்சர் ஒருவரின் உறவினர். இவரின் நியமனத்தை நாம் வரவேற்கிறோம். இந்த விடயத்தில் கூட்டமைப்பின் முடிவு எமக்குச் சாதகமானது.” இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஊடகவியலாளர்களுடன் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று விசேட கலந்துரையாடலொன்றை நடத்தினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கருத்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துள்ளமை எமக்குச் சாதகம்தான்.
இவரது நியமனத்தை நாம் வரவேற்கிறோம். ஏனெனில் அவர் எமது அமைச்சர் ஒருவரின் உறவினர். அத்துடன், எம்முடன் இணைந்து செயற்படக் கூடியவர். தமிழ்க் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் வடக்குத் தமிழர்களை அவமதித்து விட்டது என்று சொல்லலாம். ஏனெனில், நாடாளுமன்றம் என்பது தேசிய இடம். அங்கு எவரும் பிரதிநிதித்துவப் படுத்தலாம். ஆனால் மாகாணசபை எனும்போது குறித்த மாகாணத்தைச் சேர்ந்தவரே அதைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
முதலமைச்சர் வேட்பாளராகவும் அந்த மாகாணத்தைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும். இந்த விடயத்திலேயே வடக்குத் தமிழர்களை கூட்டமைப்பு அவமதித்து விட்டது. விக்னேஸ்வரனை தேசிய அரசியலில் களமிறக்கலாம். கூட்டமைப்புக்குத் தேவையாயின் சுமந்திரனின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விக்னேஸ்வரனுக்கு வழங்கலாம். வட மாகாணத்தைப் பொறுத்தவரையில், நான்கு மாவட்டங்களில் நாம் முன்னணியில் இருக்கின்றோம். எமக்கான வெற்றிவாய்ப்புகள் அங்கு அதிகமாக இருக்கின்றன. அந்த வெற்றியை நாம் எதிர்பார்க்கிறோம். வடக்குத் தேர்தலுக்கு நாம் ஏற்கனவே தயாராகிவிட்டோம் என்றார் அமைச்சர் பஸில்