2011ஆம் ஆண்டில் இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனத்துக்கும் யாழ்ப்பாணம் வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையை தொடர்ந்து, யாழ்ப்பாண பிராந்தியத்தை சேர்ந்த சிறிய மற்றும் மத்தியளவு வர்த்தக நடவடிக்கைகளுக்கு தொழிற்துறை உறவுகள் முறையில் சிறந்த செயற்பாடுகளை பின்பற்றுவது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் செயலமர்வு ஒன்று ஜூலை மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை, யாழ்ப்பாணம் ஞானம்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
ஒருநாள் செயலமர்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், சிறிய மற்றும் மத்தியளவு நிறுவனங்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) தொடர்பான நடைமுறை விடயங்கள், வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனை வழங்கல்கள் போன்றன இடம்பெறவுள்ளன.
அத்துடன், மாற்றுத்திறன் கொண்ட நபர் ஒருவரை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பான குறுகிய செயலமர்வொன்றையும் முன்னெடுக்க இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண பிராந்தியத்தை பொறுத்தமட்டில் தற்போது சுமார் 7800 மாற்றுத்திறன் வாய்ந்தவர்கள் காணப்படுவதாகவும், இதில் பெரும்பான்மையானோர் தொழில் வாய்ப்பு எதுவுமின்றி காணப்படுவதாகவும் ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாற்றுத்திறன் வாய்ந்தவர்களில் 20 வீதமானவர்களின் அவல நிலைமைக்கு இந்த பிராந்தியத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அமைந்திருந்தது.
2000ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான வலையமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்த வெவ்வேறு செயற்திட்டங்களின் மூலமாக இது வரையில் 400க்கும் அதிகமான மாற்றுத்திறன் வாய்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த செயலமர்வில், இந்த மாற்றுத்திறனாளிகளின் சமூகத்தின் மூலம் வர்த்தக நடவடிக்கைகளுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த அனுகூலங்கள் குறித்த விடயங்கள் பறிமாறப்படவுள்ளன. வவுனியாவை சேர்ந்த பார்வை குறைந்த நபர்களுக்கு வெற்றிகரமாக தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இரண்டாவது செயலமர்வை இந்த வலையமைப்பு அண்மையில் பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பயிலுநர்களுக்கு சனிக்கிழமை இடம்பெறும் செயலமர்வில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.