வடமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின்போதே வடமாகாண சபை தேர்தல் வேட்பாளர்களுக்கான நியமனப் பத்திரங்கள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்படவுள்ளதால், வேட்பாளர் நியமனங்கள் கையளிக்கும் காலங்களில் எந்தவிதமான குழப்ப நிலைகளும் ஏற்படாமல் இருப்பதன் முகமாக வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கருதி யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸ் சோதனை சாவடி அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதன்போது, வேட்பாளர் நியமனங்கள் கையளிக்கும் முதல் நாளிலிருந்து செப்டெம்பர் மாதம் வரை யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸ் சோதனை சாவடி அமைப்பதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண உறுதியளித்துள்ளதாகவும் அந்த வகையில், பொலிஸ் சோதனை சாவடி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.