வடமாகாணத்தில் அழகியல் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழகியற் பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் வடமாகாணத்தைச் சேர்ந்த 47 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் வடமாகாணத்திற்கு 24 தங்கப்பதக்கம், 8 வெள்ளிப்பதக்கம்,4 வெண்கலப்பதங்கம் அடங்கலாக வடமாகாணம் 36 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப்போட்டியில் வடமாகாண மாணவர்கள் 36 பதக்கங்களைப் பெற்றது மிக மகிழ்ச்சியளிக்கின்றது. கற்றல் செயற்பாட்டுடன் இணைந்த கலை மற்றும் விளையாட்டுத்துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்.
வட மாகாணத்தில் 500க்கும் மேற்பட்ட அழகியல் பாட ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் வடமாகாணத்தில் கலைப்பாடங்களை வளர்க்கள நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இங்குள்ள அழகியற்பாட ஆசிரியர்களை இந்தியாவிற்கு அனுப்பி அங்கு அவர்களுக்கான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
அத்துடன், ‘தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப்போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவர்களை இந்தியவிற்கு அனுப்பி அங்கு அழகியற் கலை சம்மந்தமான பயிற்சிகளைப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு செல்லவுள்ள மாணவர்களை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவு செய்வதுடன் அடுத்த மாத இறுதிக்குள் இந்திய செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்’ என்று ஆளுநர் தெரிவித்தார்.
இந்த கௌரவிப்பு நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் இராதாகிருஸ்ணன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.