வடக்கு மாகாணத் தேர்தல் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு உடனடியாக மத்திய செயற்குழுவை கூட்டுமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். கிளையினர், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் 17 உறுப்பினர் கையொப்பம் இட்ட கடிதம் ஒன்று தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில்,
‘நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு உடனடியாக மத்திய செயற்குழு கூட்டுமாறு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனிடம் மத்திய செயற்குழுவில் உள்ள 17 பேர் ஒப்பம் இட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.
ஏற்கனவே முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பிலும் ஏனைய வேட்பாளர் தெரிவிலும் எமது யாழ். கிளையின் நிலைப்பாடு தொடர்பில் கட்சியின் தலைமைப்பீடத்திற்கு எங்கள் முடிவை வெளிப்படுத்தியிருக்கின்றோம். இம்முறை அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எந்தவிதமான விடயங்களும் நாங்கள் குறிப்பிடவில்லை’ என்றார்.
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தலைமைக்கட்சி என்ற ரீதியில் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுவை உடனயடிக்க கூட்டி தேர்தல் தொடர்பாக கூடி விரைவாக ஆராய்வதற்கு தேர்தல் தொடர்பாக தீர்மானங்கள் எடுப்பதற்கு அந்த மத்திய செயற்குழுவை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
மத்திய செயற்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளிடம் தெரியப்படுத்தி முடிவுகளைப் பெறுமாறும் கோரிக்க்கை விடுத்துள்ளதாக’ அவர் மேலும் தெரிவித்தார்.