தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கத்தின் வலையமைப்பின் மூன்றாம் கட்ட அமுலாக்கம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிப்பட்டறையை கோப்பாயிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவன பயிற்சி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இதன்போது குறித்த செயற்பாடுகளில் அதிக அக்கறை எடுக்குமாறு வட மாகாண சபை உத்தியோகத்தர்களை கேட்டுக் கொண்டார்.
அரச நிகழ்ச்சித்திட்டத்தின் மீள் கட்டமைப்பு பணிப்பாளர் வசந்த தேசப்பிரிய இ-அரசாங்கம் செயற்திட்டத்தின் தற்போதைய முன்னெடுப்புக்கள் தொடர்பாக விளக்கமளித்தார். இலங்கை அரசாங்கத்தின் வலையமைப்பு செயற்திட்டத்தின் தலைவர் டில் பியரட்ன மாகாண அலுவலகங்களில் இ-அரசாங்கம் எவ்வாறு செயற்படுத்தப்படவுள்ளது என விளக்கமளித்தார். இச்செயற்திட்டத்தின் தொழில்நுட்ப பங்காளர்கள் தமது வகிபங்கு பற்றியும் அவற்றின் அமுலாக்கம் பற்றியும் தெரிவித்தார்கள். இறுதியாக பங்குபற்றுனர்கள் தெளிவுகளை பெறும் விதத்தில் வினா–விடை நிகழ்வு இடம்பெற்றது.
வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.இ.இரவீந்திரன், பிரதி பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், இச்செயற்திட்டற்கு தெரிவு செய்யப்பட்ட மாகாண உத்தியோகத்தர்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரக உத்தியோகத்தர்கள், இச்செயற்திட்டத்தின் தொழில்நுட்ப பங்காளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.