யாழ். பழைய பூங்கா வளாகத்தில் அமைக்கப்படவுள்ள சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல் இன்று புதன்கிழமை நாட்டிவைக்கப்பட்டது.
இப்பூங்காவுக்கான அடிக்கல்லை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் நாட்டிவைத்தனர்.
யாழ். மாநகர சபையால் மேற்கொள்ளப்படவுள்ள இப்பூங்கா புனரமைப்புப் பணிக்காக வடமாகாண சபை 20 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. 3 மாத காலத்திற்குள் அனைவரையும் கவரக்கூடிய வகையில் இப்பூங்கா அமைக்கப்படவுள்ளது.
இதேவேளை, பழைய பூங்கா வளாகத்திற்குள் 50 இலட்சம் ரூபா பெறுமதியில் கூடைப்பந்தாட்டத் திடல் அமைக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க இது நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.
இதற்கான நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ். அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.